பூஜா கேட்கர் எக்ஸ் தளம்
இந்தியா

போலிச் சான்றிதழ் விவகாரம் : பூஜா கேட்கர் IAS சேவையிலிருந்து அதிரடி நீக்கம்.. மத்திய அரசு அதிரடி!

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்துக் காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர், வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், அதை மாநில அரசு நிறுத்திவைத்தது.

இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இமெயில் ஐடி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையும் படிக்க: யானை அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் தூங்கிய குழந்தைகள்.. பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்!

இதையடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், அவர்மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்தது. அதோடு, அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதற்கிடையே, தன்னை துன்புறுத்தியதாக புனே மாவட்ட ஆட்சித் தலைவர் மீது பூஜா புகார் கொடுத்திருந்தார். அதன்மீது வாக்குமூலம் வாங்க பூஜாவை போலீஸார் தொடர்புகொள்ள முயன்றனர். அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அகமத் நகரில் உள்ள அவரது வீட்டிலும் அவர் இல்லாததாலும் பூஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவானதாகச் செய்திகள் வெளியாகின.

மேலும், பூஜா கொடுத்திருந்த மாற்றுத்திறனாளி சான்று குறித்து விசாரணை நடத்தும்படி புனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்து, பூஜாவிடம் கடந்த ஜூலை 23ஆம் தேதிக்குள் முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் 23-ஆம் தேதி அங்கு செல்லவில்லை. இதையடுத்து, பூஜாவின் ஐஏஎஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யுபிஎஸ்சி போர்டு பூஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

இதையும் படிக்க: தர்ஷனுக்கு டிவி வழங்கிய சிறைத்துறை.. குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்!

இந்த நிலையில்தான் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, மோசடி வழக்கு தொடர்பாக பூஜா கேட்கர் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது முன்ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தனக்கு எதிரான யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேட்கர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மோசடிக் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது. இதுதொடர்பாக சிஎஸ்இ 2022 விதி 19ன்படி 1954-ஆம் ஆண்டு அகில இந்திய சேவைகள் சட்டம் மற்றும் தகுதிகாண் விதிகளின்கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பூஜா கேட்கரின் தேர்வை ரத்து செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அவரை இந்திய நிர்வாக சேவையிலிருந்து (ஐஏஎஸ்) மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, 2009-2023க்கு இடையில் ஐஏஎஸ் ஸ்கிரீனிங் செயல்முறையை முடித்த 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவை UPSC ஆய்வு செய்தது.

இதில், பூஜா கேட்கரைத் தவிர, வேறு எந்த விண்ணப்பத்தாரர்களும் மோசடியில் ஈடுபடவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், சிஎஸ்இ விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான பயன்களைப் பெற்றிருப்பதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதன்பேரிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நாட்டுக்காக ஒற்றைக் காலை இழந்த ராணுவ வீரர்.. பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை!