சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார்,  ட்விட்டர்
இந்தியா

2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்... யார் யார் தெரியுமா?

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஓய்வுபெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9-ஆம் தேதி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். இது, நாடு முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 1988 பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்.

உத்தரகாண்ட் கேடரைச் சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உட்பட முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். கேரள கேடரைச் சேர்ந்த ஞானேஷ்குமார், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார்.

இதற்கிடையே, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது, நாளைக்கு விசாரணை வரலாம் என செய்திகள் வெளியான நிலையில், இன்று இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.