உத்தரபிரதேச மாநிலம், பரூகாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் 30 நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் தற்போது 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பரூகாபாத் மாவட்ட ஆட்சியர் ஜெய்தெண்டிரா குமார் குழந்தைகள் உயிரிழப்பை கண்டறிந்து, மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம் குழந்தைகள் உயிரிழந்தது வெளியே தெரியவந்துள்ளது.
இருப்பினும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழப்பு நடக்கவில்லை என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போதும், 30 குழந்தைகள் வேறு சில காரணங்களுக்காக உயிரிழந்ததாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
உடனடியாக பரூகாபாத் நகர காவல்நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் தலைமை கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவர்களோடு, மாவட்ட ஆட்சியரும் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.