இந்தியா

கோரக்பூரை சுற்றுலாத்தலமாக்க முடியாது: ராகுல், அகிலேஷ் மீது ஆதித்யநாத் விமர்சனம்

webteam

கோரக்பூர் நகரை சுற்றுலாத்தலமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கோரக்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரைச் சந்திக்க வந்துள்ள ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் ஆதித்யநாத் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோரக்பூர் நகரை தூய்மைப்படுத்தும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், இந்நகர மக்களுக்கு உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தால், தூய்மை இந்தியா போன்ற திட்டத்தில் தாமாகவே பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உத்தரப்பிரதேசத்தை இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராமல் சுயலாபத்திற்காகவே ஆட்சி புரிந்ததாக அகிலேஷ்யாதவ்வின் அரசை ஆதித்யநாத் மறைமுகமாகச் சாடினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மீதும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளையும் அவர் சந்தித்தார். அகிலேஷ்யாதவும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்களுக்கு ஆறுதலும், அவர் சார்பாக உயிரிழந்த குழந்தைகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் கோரக்பூரை சுற்றுலாத்தலமாக்குவதை அனுமதிக்க முடியாது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.