இந்தியா

இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ. 75,000 கோடி முதலீடு : சுந்தர் பிச்சை

இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ. 75,000 கோடி முதலீடு : சுந்தர் பிச்சை

webteam

இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் சார்பில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று சுந்தர் பிச்சையுடன் பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுந்தர் பிச்சையுடன் நடத்திய கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து சுந்தர் பிச்சையுடன் விரிவாக விவாதித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட புதிய கலாசாரம் குறித்து விவாதித்தோம் என்றும் தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கல்வி கற்றல் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் ஆகிய துறைகளில் கூகுளின் செயல்பாடுகள் குறித்தும் சுந்தர் பிச்சையிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் சார்பில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.