இந்தியா

கூகுள் மேப்பை நம்பி காரை கம்மாயில் விட்ட குடும்பத்தார்: கேரளாவில் நடந்த சோகம்!

கூகுள் மேப்பை நம்பி காரை கம்மாயில் விட்ட குடும்பத்தார்: கேரளாவில் நடந்த சோகம்!

JananiGovindhan

தெரியாத இடங்களுக்கோ, தொலைதூர பயணமாக சொந்த வாகனத்தில் சென்றால் போய் சேர வேண்டிய வழியை கண்டுபிடிக்க உதவியாக இருப்பது கூகுள் மேப் மட்டும்தான்.

தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான், தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான் என்பது போன்றுதான் கூகுள் மேப்பை நம்பி வழியை தேடுவோரின் நிலை இருக்கும்.

அப்படி கூகுள் மேப் கூறும் வழியை கண் மூடித்தனமாக நம்பி பலருக்கும் பல விதமான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த வகையில் கேரளாவில் கூகுள் மேப் கூறிய வழியை நம்பி சென்றவர்களின் நிலையை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

பத்தனம்திட்டாவின் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சோனியா என்பவர் தனது 3 மாத குழந்தை, தாய் சூசம்மா மற்றும் அவர்களது உறவினர் அனிஷ் ஆகிய நால்வரும் சென்ற கார் கோட்டயம் அருகே உள்ள பரச்சல் பகுதியில் உள்ள கால்வாயில் மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. நல்வாய்ப்பாக நால்வரும் மீட்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த விபத்து குறித்து கோட்டயம் மேற்கு பகுதி போலீசார் கூறியதாவது, “கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எர்ணாகுளத்தில் இருந்து கும்பநாட்டிற்கு மருத்துவர் குடும்பத்தினர் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கூகுள் மேப் உதவியுடன் திருவத்துக்கல் - நாட்டகம் சிமெண்ட் சந்திப்பு பைபாஸ் வழியாக வந்துக் கொண்டிருந்தபோது வழியை தவற விட்டதால் பரச்சலில் உள்ள கால்வாயில் அவர்கள் வந்த கார் மூழ்கியிருக்கிறது.

ஆனால், காரில் இருந்தவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு அருகே கடையில் இருந்தவர்கள் மருத்துவர் குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். இதனிடையே போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவலும் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பரச்சல் பகுதி மக்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.