இந்தியா

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியரை டூடுல் போட்டு சிறப்பித்த கூகுள்

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியரை டூடுல் போட்டு சிறப்பித்த கூகுள்

JustinDurai

இன்றைய கூகுள் டூடுலில் இடம்பெற்றிருப்பவர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ். இவர் சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.

ஒவ்வொரு நாளும் அன்றைய தினம் உலக அளவில் ஏதேனும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் அதை சித்தரிக்கும் வகையில் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் போட்டு சிறப்பித்து வருகிறது கூகுள் நிறுவனம். அந்த வகையில் இன்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியரான மல்யுத்த  வீரர்  கஷாபா தாதாசாகேப் ஜாதவின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்.

சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ். மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவரான அவருக்கு ஐந்து வயதில் மல்யுத்த விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. தேசிய அளவில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் கஷாபா தாதாசாகேப் ஜாதவ். அதுவரை மண்ணில் மல்யுத்த விளையாட்டு விளையாடி அவர் முதல்முறையாக மேட்டில் விளையாடியதே ஒலிம்பிக் அரங்கில்தான். அவரது செலவுகளை கோலாப்பூர் மகாராஜா ஸ்பான்ஸர் செய்திருந்தார். பிளைவெயிட் பிரிவில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி, அடுத்த போட்டியில் தோல்வியை தழுவி ஆறாவது இடம் பிடித்தார்.

முதல் ஒலிம்பிக்கில் பெற்ற அனுபவத்தை மூலதனமாக வைத்து நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் கஷாபா. 1952ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் Bantamweight கேட்டகிரியில் பங்கேற்றார். மூன்று வெற்றி, இரண்டு தோல்வியை தழுவிய அவர் ரேங்கிங்கில் மூன்றாம் இடம் பிடித்தார். அதன் மூலம் அந்த முறை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் அவர். அது சரித்திர சாதனையாக அமைந்தது.

1955-ல் காவல் துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதோடு பயிற்சியாளரகவும் பணியாற்றியுள்ளார். ஓய்வூதியம் கிடைக்க மிகவும் போராட்டம் மேற்கொண்டதாக கூட தகவல்கள் சொல்கின்றன. இறுதியில் சாலை விபத்தில் 1984-ல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு அர்ஜுனா விருது அவருக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இப்போது அவருக்கு தான் டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.