இந்தியா

இஸ்ரோவின் தந்தைக்கு சிறப்பு கௌரவம் செய்த கூகுள்..!

webteam

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயின் 100-ஆவது பிறந்த நாளான இன்று அவருக்கு கூகுள், டூடுலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. 

குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் 1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி விக்ரம் சாராபாய் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை அகமாதாபாத்தில் முடித்தார். அதன்பிறகு 1940ஆம் ஆண்டு இவர் தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றிருந்த வேலையில் விக்ரம் சாராபாய் இந்தியா திரும்பினார். இங்கு வந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூருவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் அகமாதாபாத்தில் ஒரு இயற்பியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1960ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதைய இந்திய அரசுக்கு விண்வெளி ஆராய்ச்சி முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கி இந்தியா விண்வெளி துறையில் கால் பதிக்க முக்கிய நபராக இவர் திகழ்ந்தார். இதனையடுத்து பல ஆராய்ச்சிகள் மற்றும் சோதனை முயற்சிகள் மூலம் இந்தியா விண்வெளி துறையில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. 

இந்தியாவின் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விக்ரம் சாராபாய்க்கு இந்திய அரசு 1966-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 1972ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் வழங்கி சிறப்பு செய்துள்ளது. இவரையுடைய பிறந்த நாளான இன்று இவரை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.