கூகுள் நிறுவனம் PT
இந்தியா

Gemini AI-யால் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்! என்ன காரணம்?

சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவான ஜெமினி ஏ.ஐ பல விவகாரங்களில் சிக்கியிருக்கிறது. அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு ஜெமினி ஏ.ஐ தவறாக பதில் அளித்து இருக்கிறது.

PT WEB

தேடுதளம் என்றாலே உலகின் மூலை முடுக்கில் உள்ளவர்களுக்கும் பரிச்சயமான ஒன்று, google. ஆனால் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜெட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்நிறுவனம் ஏனோ பின் தங்கியுள்ளது.

சமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்தியிருந்த செயற்கை நுண்ணறிவான ஜெமினி ஏ.ஐ-யால், கூகுள் நிறுவனத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். ஆம், ஜெமினி ஏ.ஐ அளித்த சில தவறான பதில்களால் இந்திய அரசிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.

ஜெமினி ஏ.ஐ. அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு ஜெமினி ஏ ஐ தவறாக பதில் அளித்திருந்தது. இதற்காகத்தான் இந்திய அரசாங்கத்திடம் கூகுள் நிறுவனம் மன்னிப்புக்கோரி இருக்கிறது.

சம்பவத்தின்படி (கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்னர்) ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்திருந்தது. மேலும் பிரதமர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறியிருந்தது. இதையடுத்தே பிரச்னை தீவிரமானது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “ஜெமினி ஏ ஐ தளம் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பிரதமர் மோடி பற்றி ஜெமினி அளித்த ஆதாரமற்ற தகவல்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரி இருக்கிறது” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் பல பிரச்னைகளை கூகுள் நிறுவனம் சந்தித்து வருவதால், அந்நிறுவனத்தின் தலைமை செயலாளரான சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன