செய்தியாளர்: ஆண்டோ எம் தாம்சன்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் கனவுத் திட்டம் இன்னும் சில நாட்களில் சட்டமாக கொண்டு வரப்பட இருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்ற அந்த பரிந்துரையால் நாட்டில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என பாஜக ஆதரவு தெரிவிக்க, இது சாத்தியமற்றது மட்டுமின்றி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.
இது ஒருபுறமிக்க ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தற்போது காணலாம்.
இத்திட்டத்தின் பலனாக முக்கியமானதாக கருதப்படும் சாராம்சம், தேர்தல் செலவு பற்றியே. மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதால் பெருமளவில் செலவுகள் குறையும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என இரண்டுக்கும் தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இது தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்லாது அதில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் நேரமிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவுகள் குறையும், தலைவர்களும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபடவேண்டிய சூழல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் மக்களுக்கான பல சேவைகள் தடைபடாது.
இவை எல்லாம் நன்மைகள் எனக் கூறப்படும் நிலையில் ஒரேநாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் தீமைகளும் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன்படி,
இந்த திட்டம் பெரும்பாலும் தேசிய கட்சிகளுக்கே அதிக பலன் தரும் என விமர்சனம் எழுந்துள்ளது. மாநில அல்லது பிராந்திய கட்சிகள் தங்களது கொள்கைரீதியாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.
சுயாட்சி உரிமை பறிபோய்விடும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சமும் இத்திட்டத்தால் எழுந்துள்ளது.
அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் நிலைமையும் ஏற்படும் என கூறப்படுகிறது.
மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என கருதப்படுகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் ஏற்படும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.