இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு: பினராயிக்கு எதிராக ஆடியோவை வெளியிட்ட ஸ்வப்னா சுரேஷ்!

தங்கக் கடத்தல் வழக்கு: பினராயிக்கு எதிராக ஆடியோவை வெளியிட்ட ஸ்வப்னா சுரேஷ்!

ச. முத்துகிருஷ்ணன்

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், புதிய திருப்பமாக ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் எனக் கூறப்படும் பத்திரிகையாளர் ராஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசியதாக அந்த உரையாடல் உள்ளது.

அதில், முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டை சகித்துக் கொள்ளமாட்டார் என்றும், எனவே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்க வேண்டும் என ராஜ்கிரண் பேசியுள்ளார். இந்த உரையாடல் பதிவு வெளியான நிலையில், முதலமைச்சருக்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராஜ்கிரண் பத்திரிகையாளர் எனக் கூறப்படும் நிலையில், முழுமையான உரையாடல் பதிவை வெளியிடப் போவதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிப்பணியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோட்டயத்தில் உள்ள கேரள கெசட்டட் அதிகாரிகள் சங்கத்தின் 56ஆவது ஆண்டு மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டத்தை தொடங்கி வைத்த அவர், மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது எனக் கூறியுள்ளார். மேலும் எந்த விதமான தந்திரங்களும் இங்கு வேலை செய்யாது என்றும், அரசை அசைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.