தங்கக் கடத்தல் வழக்கில், தன்னை மிக மோசமாக புண்படுத்துவதாகவும், அதற்கு பதிலாக கொன்று விடுங்கள் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியபடி கதறி அழுதார்.
கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மேலும், பினராயி விஜயன் தொடர்பாக ராஜ் கிரண் என்பவருடன் பேசிய உரையாடலையும் ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து பினராயி விஜயனை கண்டித்து, கேரள எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அரசு வழங்கி வருவதாகவும், மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது எனவும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்வப்னா சுரேஷ், தன்னை ஏன் தொடர்ந்து புண்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
“முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவர் மீதும் நான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளேன். அவ்வாறு ரகசிய வாக்குமூலத்தின்போது நான் அவர்கள் மீது கூறிய புகார்களிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை குறி வைத்து காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என பத்திரிகையாளர் ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அதே போல் நடந்தது. என்னுடைய வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யும் என்றும் கிரண் கூறியிருந்தார். அதுவும் நடந்தது. என்னை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னை கொன்றுவிடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும்” எனவும் கூறி, பத்திரிகையாளர்கள் முன்பாக அவர் கதறி அழுதார் ஸ்வப்னா சுரேஷ்.