தங்கத்தின் விலை அதிகரிப்பு PT
இந்தியா

ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.. ரூ.51,000-ஐ தாண்டி பாய்ச்சல்; கலக்கத்தில் சாமானியர்கள்!

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் அந்நாட்டு மைய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாக உள்ளது.

PT WEB

சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 51 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 140 ரூபாய் விலை உயர்ந்து 6 ஆயிரத்து 390 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆயிரத்து 120 ரூபாய் விலை அதிகரித்து 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை ஏற்றம் கண்டு 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது.

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் அந்நாட்டு மைய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு 3 முறையாவது கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், முதலீடுகள் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச அளவில் பண்டக சந்தையில் தங்கம் விலை கணிசமாக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார புள்ளி விவரங்கள் பொதுவாக பாமர மக்களுக்கு புரிவதில்லை. ஆனால், மகளின் திருமணம், உறவினர்களுக்கு சீர்வரிசை என அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கம் வாங்க வேண்டிய சூழலில் உள்ள தங்களுக்கு இந்த விலையேற்றம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக புலம்புகின்றனர்.