உத்தரகாண்ட் எக்ஸ் தளம்
இந்தியா

உத்தரகாண்ட் | “தெய்வீக உத்தரவு கனவில் வந்தது” - புனித ஏரியில் திடீர் கோயில்; சர்ச்சையில் சாமியார்!

Prakash J

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று உள்ளது. இங்கிருந்து உருவான புனித ஏரிக்கு அருகில் உள்ள சுதேர்துங்கா நதி பள்ளத்தாக்கில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பாபா சைதன்யா ஆகாஷ் என்ற ஆதித்ய கைலாஷ், இந்தக் கோயில்லைக் கட்டும்படி தெய்வீக உத்தரவு தனது கனவில் வந்ததாகவும், அதனாலேயே இதைக் கட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கோயிலைக் கட்டுவதற்கு உள்ளூர்வாசிகள் சிலர் அவருக்கு உதவியுள்ளனர். இதையடுத்து அந்த கோயிலேயே வசித்து வந்த ஆதித்ய கைலாஷ், புனித ஏரியான தேவி குண்டில் நீராடியிருக்கிறார். இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியுற்றதுடன், காவல் துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அக்ஷய் பிரஹலாத் கோண்டே, ”கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தை, கடினமான சாலை வழியாகவே அடைய முடியும். தவிர, இப்பாதை மழைக்காலங்களில் மூடப்பட்டிருக்கும். மரம் மற்றும் கற்களால் அங்கு ஒரு சிறு கோயில் கட்டப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. யாரும் வசிக்காத நிலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அவர், தற்போது புனித ஏரியான தேவி குண்டில் நீராடுவதற்குத்தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது, இழிவுபடுத்தும் செயலாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

இந்தச் செயல், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்கள் அந்த ஏரியைக் கடவுளாக வணங்குகிறார்கள். மேலும், வருடத்திற்கு ஒரு முறை தங்கள் தெய்வங்களை அதில் நீராட்டுகிறார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக ஆதித்ய கைலாஷ் ஒருசிலரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், அவரது கருத்துகளை கிராம மக்கள் எனக் கூறப்படுகிறது. இதையடுத்தே கைலாஷ் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரினர். அதன்பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும் விசாரணையில், ”இந்த இடத்தை அடைவது கடினம். அதை அடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். மேலும் பாபா என்று கூறிக்கொள்ளும் கைலாஷ் பற்றிய விவரங்கள் அறியப்பட்டு வருகிறது. அவர், தனது பெயரை மாற்றிக்கொண்டே இருப்பதோடு, சந்தேகத்திற்குரிய குணம் கொண்டவராக தோன்றுகிறார். அவர் தன்னை சில சமயங்களில் சைதன்யா ஆகாஷ் என்றும் சில சமயங்களில் ஆதித்ய கைலாஷ் என்றும் அழைத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இரண்டு பெயர்களில் எது அவரது உண்மையான பெயர் என்று சொல்வது கடினம். அவர், அரசியல்வாதிகளையும் சந்தித்து வருகிறார். துவாரஹத் மற்றும் ஹரித்வாரில் அடைக்கலம் மறுக்கப்பட்ட பிறகு அவர் இங்கு தங்க வந்ததாகத் தெரிகிறது” என தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: ”பட்டம் பெறுவதால் பயனில்லை; பஞ்சர் கடை வைக்கலாம்” - மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்.எல்.ஏ.!