கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் 11 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில், அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தீ வைக்கப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அதேபோல், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்குகளும் தனியாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றம் கடந்த மார்ச் 2011-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். போதிய சாட்சியங்கள் இல்லையென்று கூறி 63 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில், 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், 11 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், வழக்கில் இருந்து 63 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான குஜராத் அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு விரைவில் நடைபெறவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.