இந்தியா

ஹிஜாப்பை அகற்றாததால் நெட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - முஸ்லீம் பெண் புகார்

webteam

ஹிஜாப்பை அகற்றாததால் நெட் தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என முஸ்லீம் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக சேருவதற்கும் தேசிய அளவிலான தகுதி தேர்வில்(நெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இந்த தேர்வு யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவா மாநிலம் பஜாஜி நகரில் டிசம்பர் 18-ஆம் தேதி நெட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சஃபீனா கான் சவுதாகர் என்ற முஸ்லீம் பெண் மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் முஸ்லீம்கள் மத நம்பிக்கையின் படி தலையில் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த தேர்வு அதிகாரிகள் ஹிஜாப்பை அகற்றும்படி கூறியுள்ளனர். ஆனால் சஃபீனா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது என் மத நம்பிக்கை. அதனால் அகற்ற முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் தேர்வு எழுத சஃபீனாவை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.

இதுகுறித்து சஃபீனா கூறுகையில், “நான் மதியம் 1 மணிக்கு மையத்திற்கு வந்தேன். அங்கு தேர்வு அட்டையை சரிபார்க்கும் அதிகாரி எனது ஹிஜாப்பை அகற்றுமாறு கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். என் மத நம்பிக்கை படி அங்கு பல ஆண்கள் இருந்ததால் நான் ஹிஜாப்பை அகற்ற மறுப்பு தெரிவித்தேன். பின் வேறு அதிகாரியிடம் அவர் ஆலோசனை செய்துவிட்டு என் காதுகளை பார்க்க வேண்டும் என கூறினார். நான் என் காதுகளை காண்பித்தேன். பின்னர், என் ஹிஜாப்பை சரிசெய்து கொள்ள கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கூறினர். தேர்வு எழுதி வெற்றி பெறுவதைவிட என் மத நம்பிக்கையே எனக்கு முக்கியம் என ஹிஜாப்பை அகற்றவில்லை” என குறிப்பிட்டார்.

இதுகுறித்து பனாஜி உயர் கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியிடம் கேட்ட போது, “ஹிஜாப் மட்டுமல்ல.  நெட் தேர்வின் போது திருமணமான பெண்கள் அணியும் தாலி உட்பட எந்த நகையையும் அணிய தேர்வு மையத்தில் அனுமதி இல்லை. நெட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதி செய்யவும் தேர்வு மோசடியை தடுக்கவும் இந்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது” என தெரிவித்தார்.