இந்தியா

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது பாஜக

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது பாஜக

Rasus

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

கோவா முதலமைச்சராக இருந்‌த மனோகர் பாரிக்கர் மறைந்‌த நிலையில், புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலையில் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். தனிப்பெரும் கட்சியாக உள்ள‌ தங்களையே ஆ‌ட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமென காங்கிரஸ் கேட்டுக்கொ‌ண்டிருந்தது. அதேசமயம் காலம் கடத்தாமல் விரைந்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் பாஜகவும் விரும்பியது.

இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு ஆளுநரை முதலமைச்சர் சாவந்த் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு, முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டார்.

இதற்காக பேரவையின் சிறப்பு கூட்ட‌ம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியது. அப்போது முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 19 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையான நிலையில், 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார். முதலமைச்சர் பிரமோத் சாவந்திற்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.