கேரளா நிலச்சரிவு முகநூல்
இந்தியா

கேரளாவில் ஏற்பட்ட கோர நிலச்சரிவு! இதுதான் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

PT WEB

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு வெப்பமயமாதலே முக்கியக் காரணம் எனத் தெரியவந்திருக்கிறது.

அரபிக்கடல் வெப்பமயமானதால் அடர்த்தியான மேககூட்டங்கள் உருவாகி குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பொழிய காரணமாகிவிட்டது என பருவக்காலங்களை ஆராய்ந்து வரும் மூத்த விஞ்ஞானி அபிலேஷ் தெரிவித்துள்ளார்.

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக செயல்பட்டு வரும் அபிலேஷ், இது குறித்து தெரிவிக்கையில், ”ஒட்டுமொத்த கொங்கன் பகுதிகளிலும் கடந்த இருவாரங்களாக பருவமழை தீவிரமடைந்திருந்தே நிலச்சரிவுக்கு காரணம்.

இதனால் தான் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிகோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. இருவாரங்களாக பெய்து வந்த மழை காரணமாக மண்வளம் ஏற்கெனவே அதிக ஈரப்பதத்துடன் இருந்தது இந்தச் சூழலில் அரபிக்கடலோரத்தில் அதிகப்படியான கருமேகங்கள் சூழ்ந்து, அதிதீவிர மழை பொழிந்ததால் இளகி இருந்த மண் பலவீனமடைந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதாவது, 2019 ஆம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது எந்த அளவுக்கு மேகங்கள் அடர்த்தியாக இருந்தனவோ அதே அளவுக்கு தற்போதும் அடர்த்தியாக சூழ்ந்திருந்தது. இது தவிர, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி வெப்பமடைந்து, அங்கு வளிமண்டலத்தை உருவாக்கியது. இதற்கும் பருவநிலை வெப்பமயமாதலுக்கும் தொடர்பு இருக்கிறது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.