'ராகுல் காந்தி திருமணமாகாதவர்; அவருடன் பேசும்போது கல்லூரி மாணவிகள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய போது, "ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வது ஏன்? அந்த கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பாடம் நடத்துவது ஏன்? ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். ராகுல் காந்தி திருமணமாகாதவர். அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் முன்பாக மாணவிகள் குனிந்து, நிமிர வேண்டாம்" என்று முகம் சுளிக்கவைக்கும் வகையில் பேசினார்.
ஜாய்ஸ் ஜார்ஜின் பேச்சுக்கு பலத்த கண்டனங்கள் கிளம்பிய நிலையில், "நான் தவறு செய்துவிட்டேன். எனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்" என்று ஜார்ஜ் மன்னிப்பு தெரிவித்தார்.