இந்தியா

திருமணமா? படிப்பா? வீட்டை விட்டு வெளியேறிய மீரட் பெண் 7 ஆண்டுகளுக்கு பின் சாதனை

திருமணமா? படிப்பா? வீட்டை விட்டு வெளியேறிய மீரட் பெண் 7 ஆண்டுகளுக்கு பின் சாதனை

Sinekadhara

படிக்கும் பெண்களுக்கு பிரச்னை என்றாலே, பெற்றோர்கள் எடுக்கும் திருமணம் குறித்த முடிவுதான். திருமணம்செய்துகொண்டு குடும்பம், குழந்தை, கணவன் என வாழும் பெண்களில் பலரும் தங்கள் கனவுகளையும், ஆசைகளையும் புதைத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான். தனது கனவு, ஆசையை நிறைவேற்ற பெற்றோர்களுடன் சண்டையிட்ட பெண்கள் சாதனையாளர்களாக உருவாகியிருக்கிறார்கள்.

அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா(வயது 28) வீட்டின் எதிர்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளார். சஞ்சு இளநிலைப்படிப்பை மீரட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்துவிட்டு, 2013ஆம் ஆண்டு தனது முதுகலைப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இவருடைய தாயார் மரணமடைந்துவிட்டார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

படித்து வேலைக்கு போகவேண்டும் அல்லது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் சஞ்சு ராணி. அப்போது அவர் எடுத்த உறுதியான, தைரியான ஒரு முடிவு அவரது வாழ்க்கையை மாற்றும் தொடக்க புள்ளியாக அமைந்தது. அவர் படிப்பைத் தொடர திட்டமிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். உண்மையில் ஒரு வீட்டை விட்டு வெளியேறுவது என்பது எத்துனை துணிச்சலான முடிவு. அதுவும் கைகளில் கொஞ்சம் கூட பணம் இல்லாமல்.

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வி படிப்பைத் தொடர முடியவில்லை. வெளியே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததோடு, தனியார் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியராக வேலைபார்த்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தன்னை தயார்செய்து வந்தார்.

மாநில பொதுசேவை ஆணையத்தின் 2018ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. தனது விடாமுயற்சியால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார் சஞ்சு. விரைவில் வணிக வரி அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ள அவர், சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.