இந்தியா

சத்தீஸ்கர்: 7 மாதங்களில் 7 இடங்களில் விற்பனை - தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

சத்தீஸ்கர்: 7 மாதங்களில் 7 இடங்களில் விற்பனை - தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

webteam

18வயதான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 7 மாதத்தில் அந்த இளம்பெண் 7 முறை விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். அவரது வழக்கை விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்த இளம்பெண் கடந்த 7 மாதங்களில் 7 முறை விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளன.

தந்தைக்கு உதவியாக இருந்த இளம்பெண்ணை அவரது உறவினர் ஒருவர் மத்தியப்பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரூ.20ஆயிரத்துக்கு அந்த இளம்பெண்ணை ஒருவரிடம் விற்றுள்ளனர். அவர் தொடர்ந்து பலராலும் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் உள்ளார். ஒரு பொருளைப்போல அந்த இளம்பெண்ணை அந்தக்கும்பல் பல இடங்களில் விற்பனை செய்துள்ளது.

கடைசியாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் ரூ.70ஆயிரத்துக்கு இளம்பெண்ணை வாங்கியுள்ளார். அந்த பெண்ணை தன்னுடைய மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு அவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார். மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை இளம்பெண்கள் விற்கப்படுவது தொடர்பாகவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது