இந்தியா

மத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன் ?

மத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன் ?

Rasus

மத்திய அமைச்சரவை செயலாளராக உள்ள பிரதீப் குமார் சின்காவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான போட்டியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனும் இருப்பதாக தகவல் கசிய தொடங்கி உள்ளது.

மத்திய அமைச்சரவை செயலாளராக கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் பிரதீப் குமார் சின்கா. கடந்த 1977-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட இவர், மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார். வரும் ஜூன் 12ம் தேதியுடன், மத்திய அமைச்சரவை செயலாளராக இருக்கும் பிரதீப் குமார் சின்காவின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் அடுத்த செயலாளர் பதவிக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதனும் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிஜா வைத்தியநாதன் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ளார். கிரிஜா வைத்தியநாதன் ஒருவேளை அப்பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தான் மத்திய அமைச்சரவை செயலாளராக பதவி வகிக்கும் முதல் பெண் ஆவார்.

இப்போட்டியில் கிரிஜா வைத்தியநாதனோடு சேர்த்து மூத்த அதிகாரிகள் சிலரும் உள்ளனர். கிரிஜா வைத்தியநாதன் தவிர, மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் அருணா சுந்தர்ராஜன், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக் ஆகியோரும் இதற்கான போட்டியில் உள்ளனர். கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கிடரமணன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.