குலாம் நபி ஆசாத் pt web
இந்தியா

2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குலாம்நபி ஆசாத்... எந்த தொகுதியில் தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Angeshwar G

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதில் ஜம்மு காஷ்மீரில், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு விலகிய குலாம் நபி ஆசாத், சொந்தமாக ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (DPAP) எனும் கட்சியைத் தொடங்கி இருந்தார்.

இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் அனந்தநாக், ஷோபியான், குல்காம் ஆகிய மாவட்டங்களையும், ஜம்முவின் பூஞ்ச் பகுதியையும் உள்ளடக்கிய அனந்தநாக் - ரஜோரி தொகுதியில் போட்டியிட குலாம் நபி ஆசாத் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை DPAP மூத்த தலைவர் தாஜ் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

முன்னதாக 2014 ஆம் ஆண்டு உதம்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆசாத், பாஜக வேட்பாளர் ஜிதேந்திரா சிங்கிடம் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

Mian Altaf

தற்போது தேசிய மாநாடு கட்சி வசம் உள்ள அனந்தநாக் - ரஜோரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக முன்னாள் நீதிபதி ஹஸ்னைன் மசூதி இருந்து வருகிறார். ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சி வரும் தேர்தலில் மெயின் அல்தாஃபை (Mian Altaf) அத்தொகுதியின் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

அவரை எதிர்த்து குலாம் நபி ஆசாத் தேர்தலில் களமிறங்கி உள்ளார். அதே சமயத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் (Peoples Democratic Party) தலைவரான மெகபூபா முப்தியும் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் INDIA கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யார் வசம் தொகுதி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.