இந்தியா

காங்கிரஸ் சார்பில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு செல்கிறாரா குலாம் நபி ஆசாத்?

காங்கிரஸ் சார்பில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு செல்கிறாரா குலாம் நபி ஆசாத்?

நிவேதா ஜெகராஜா

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள 23 முக்கிய தலைவர்களில் ஒருவராக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் உள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவரது பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்து இந்த முறை தமிழகத்தில் இருந்து அவரே தேர்ந்தெடுக்கப்படலாம் என காங்கிரஸ் கட்சியின் மேலிட வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான மறைந்த முகமது ஜான் மற்றும் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரது இடங்களையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.

இவை தவிர மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்க கூடிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தத் தேர்தல்களை நடத்த முடியாத சூழலில் உள்ளது. வைரஸ் பரவல் சற்று குறைந்து வருவதை தொடர்ந்து, தேர்தல் பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளராகவும் தொடர்ந்து தமிழக அரசியலில் கூட்டணி உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் இடம் பெறுபவருமான குலாம் நபி ஆசாத்தை, தமிழகத்திலிருந்து இந்த முறை மாநிலங்களவைக்கு அனுப்புவதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குலாம் நபி ஆசாத்தை அதிக அளவில் பயன்படுத்தலாம் என யோசனையை முன் வைக்கிறது காங்கிரஸ் கட்சி.

கடந்த முறை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து குலாம் நபி ஆசாத் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஆனால் தற்பொழுது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு விட்டதால் அங்கு சட்டமன்றத் தேர்தல் எதுவும் நடைபெறாததாலும் மாநிலத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இது ஆரம்பகட்ட முடிவுகள் தான் என்றும் இன்னும் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என டெல்லி காங்கிரஸ் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் கட்சி இத்தகைய முடிவெடுத்து இருந்தாலும் இதற்கு கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள குலாம்நபி ஆசாத் ஒத்துக் கொள்வாரா, கூட்டணியில் உள்ள திமுக விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒத்துக் கொள்வார்களா, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகம் உட்பட தென் இந்திய அரசியலில் அது தாக்கத்தை வழங்குமா உள்ளிட்டவை எல்லாம் பதில் தெரிய வேண்டிய கேள்விகளே.

- நிரஞ்சன்குமார்