flight x page
இந்தியா

ஒரேநாளில் 11.. ஒரு வாரத்தில் 50.. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்படும் விமானங்கள்!

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் இன்றுவரை 50 விமானங்களுக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 11 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Prakash J

சமீபகாலமாக, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் இன்றுவரை 50 விமானங்களுக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 11 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், டெல்லியில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற விஸ்டாரா விமானம், ஜெய்ப்பூர்-துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இதுதவிர 5 ஆகாசா ஏர் மற்றும் 5 இண்டிகோ விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலைச் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஆகாசா ஏர் நிறுவனம், "இன்று, எங்கள் நிறுவன விமானங்களுக்கு எச்சரிக்கை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி, உள்ளூர் அதிகாரிகள் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றியதால், அனைத்து பயணிகளையும் இறக்க வேண்டியிருந்தது. சிரமத்தை குறைக்க எங்கள் குழுவினர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல், குறைந்தது 50 விமானங்களுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதுதொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனையின்போது, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஐந்தாண்டுகளுக்கு புரளி அழைப்பாளர்களை நோ-ஃப்ளை பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அதுபோல், மேலும் வெடிகுண்டு மிரட்டல்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ”இதன் முதற்கட்ட விசாரணைகள் எதுவும் சதித்திட்டத்தை சுட்டிக்காட்டவில்லை. பெரும்பாலான அழைப்புகள் சிறுவர்களால் அழைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற புரளி வெடிகுண்டு அழைப்புகள் நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர விமானப் போக்குவரத்துத் துறை பரிசீலித்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!