இசைக்கச்சேரி எக்ஸ் வலைதளம்
இந்தியா

ஜெர்மனி | ”இது சரியா?” அரசு பேருந்தில் இந்திய இளைஞர்களின் இசைக் கச்சேரி.. விவாதத்தை கிளப்பிய வீடியோ!

நடத்தப்படும் தங்களது இசைக்கச்சேரியை அடுத்தவர்கள் ரசிக்கின்றனரா அல்லது வெறுக்கின்றனரா என்பதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை... சுதந்திரம் என்ற போர்வையில் ஆங்காங்கே இத்தகைய சம்பவம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

Jayashree A

ஜெர்மனியில் பெர்லின் என்ற பகுதியில் அரசு பேருந்தில் சென்ற இந்திய இளைஞர் குழுவினர் நடத்திய இசைக் கச்சேரியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாகி வருகிறது.

சமீப நாட்களில் முன்னனி இசைக்கலைஞர்கள் இசைக்கச்சேரி நடத்துவது அதிகரித்து வரும் நிலையில், இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பொது மக்களும் நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... என்பதிற்கிணங்க பொதுவெளியில் தங்கள் குழுவினருடன் இசைக்கச்சேரியை அரங்கேற்றிவருவது ஒரு ட்ரெண்டாகி வருகிறது.

அப்படி நடத்தப்படும் தங்களது இசைக்கச்சேரியை அடுத்தவர்கள் ரசிக்கின்றனரா அல்லது வெறுக்கின்றனரா என்பதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை... சுதந்திரம் என்ற போர்வையில் ஆங்காங்கே இத்தகைய சம்பவம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

அதன்படி ஜெர்மனியில் பெலின் என்ற பகுதியில் இந்தியர்கள் சிலர் ஒரு குழுவினராக இணைந்து அப்பகுதியில் ஓடும் பஸ்ஸில் சத்தமாகப்பாடி தங்களது இசைக்கச்சேரியை நடத்தியுள்ளனர்.

இந்த வீடியோவானது தற்பொழுது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்ட ஒருவர்,

”இந்த வீடியோ ஜெர்மனியின் பொது போக்குவரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியர்கள் இந்த சத்தம் எழுப்பும் போக்கிரிகளை கண்டுபிடித்து, ஜெர்மனியில் இருப்பதற்கான அவர்களின் அனுமதிகளை ரத்து செய்வது மட்டுமல்லாமல், அவர்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று நம்புகிறேன்” என்று தனது பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவரா என்பது தெரியவில்லை.

இருப்பினும் இவர் பதிவிற்கு கருத்து கூறிவரும் சிலர் இந்தியர்களுக்கு ஆதரவளித்து, “இதை மக்கள் பொழுது போக்காக மட்டுமே பார்க்க வேண்டும். மற்ற பயணிகளுக்கு இவர்களின் இசை அசௌரியத்தை ஏற்படுத்தி இருந்தால், அவர்கள் இந்தியர்களிடம் தெரிவித்து இருக்கலாம் “ என்று கூறுகின்றனர்.

வேறு சிலர் “இவர்களின் இசைக்கச்சேரி அங்கிருந்த பயணிகள் சிலருக்கு இடையூறாகவும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும்” என்று இருவிதமாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாட்டில் பொதுப்போக்குவரத்தை அமைதியான முறையில் பயன்படுத்தவேண்டும், என்று சொல்லப்படுகிறது. அத்துடன், புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்திற்கு ஏற்ப பொது இடங்களில் நடந்துக்கொள்ளவேண்டும். இது அவர்களுக்கு சவாலான ஒன்று என்றாலும் இந்தியர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.