Priyanka Gandhi Twitter
இந்தியா

“இந்த முறை யோசித்து வாக்களியுங்கள்” - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பேச்சு

“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் தாவணகெரே மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில், தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் மனைவி, பிரபா மல்லிகார்ஜுன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசிய போது...

“நூற்றுக்கணக்கான மகளிரை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் கையை பிடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். பாலியல் வன்கொடுமை விஷயம் பகிரங்கமானதும், அந்த நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். எந்த அரசியல்வாதி எங்கு செல்வார் என்று அறிந்த மோடிக்கு, அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறியது தெரியாதது போல் நடிக்கிறார். மகளிரை பாதுகாக்க வேண்டும் என்று கூறும் அவர், பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எப்போதுமே மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. தேர்தல் நேரத்தில், இரண்டு மாநிலங்களின் முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளார். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், எத்தனை பள்ளி, கல்லூரிகள் திறந்தார், எத்தனை சாலைகள் போட்டார், எத்தனை மருத்துமனைகள் கட்டினார் என்று மக்களுக்கு சொல்லவில்லை.

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

தற்போது புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது. இந்த நாடு உங்களுடையது, இந்த வளம் உங்களுடையது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் வளம், வாக்குறுதி திட்டங்கள் மூலம் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள். கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிபடி ஐந்து வாக்குறுதிகளும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்பட்டன.

பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அன்னபாக்யா திட்டத்தால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்” என்றார்.