இந்தியா

தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தி நெகிழ வைத்த காம்பீர் !

தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தி நெகிழ வைத்த காம்பீர் !

jagadeesh

தன் வீட்டில் பணி புரிந்த பெண்ணின் இறந்த உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப முடியாத காரணத்தால் அவருடைய இறுதிச் சடங்கைத் தானே நடத்தியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இந்திய கிரிக்கெட் அணி 2007, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் சிறப்பாக விளையாடியவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு பாஜகவில் சேர்ந்த காம்பீர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக இருக்கிறார்.

மிகவும் கரடுமுரடான நபராகக் கருதப்படும் காம்பீர், இப்போது நெகிழ்ச்சியடையும் செயலை செய்திருக்கிறார். அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்து பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி பத்ரா, இவர் கவுதம் காம்பீர் இல்லத்தில் பணிப்பெண்ணாக 6 ஆண்டுக் காலம் பணியாற்றி வந்துள்ளார். 49 வயதான இவருக்கு உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்துள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் சரஸ்வதியின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே, சரஸ்வதியின் இறுதிச் சடங்கைத் தானே முன்நின்று நடத்தி அவரை நல்லடக்கம் செய்துள்ளார் கவுதம் காம்பீர். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள காம்பீர் "என்னுடைய குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பதை வீட்டு வேலையாகக் கருத முடியாது. அவர் என் குடும்பத்தில் ஒருவர். அவரின் இறுதிச் சடங்கை நடத்துவது என் கடமை" என்றார்.

 மேலும் தொடர்ந்த காம்பீர் "நான் எப்போதும் மனிதத்தை மட்டுமே நேசிக்கிறேன். அது ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாட்டுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. அதுவே இந்தியாவின் பெருமை, ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார். காம்பீரின் இந்தச் செயலுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டு தெரிவித்துள்ளார், அதில் "சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாளிலிருந்தே காம்பீர் பார்த்துக்கொண்டார். அவரின் இந்த மனிதநேயமிக்க செயலை நான் பாராட்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.