இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர். இவர் மோசமான ஃபார்ம் காரணமாக 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.
147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5,238 ரன்களும், 58 டெஸ்ட் போட்டி களில் 4,154 ரன்களும் எடுத்துள்ள காம்பீர், புது டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தொகுதியின் பாஜக எம்.பி.யாக மீனாட்சி லேஹி இருக்கிறார். கவுதம் காம்பீருக்கு இந்த தொகுதி வழங்கப்படுவதால் மீனாட்சிக்கு வேறு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அமிர்தசரஸில் போட்டியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை ஆதரித்து கவுதம் காம்பீர் பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கவுதம் காம்பீர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன், வீரேந்திர சேவாக் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளி யாயின. அதை அவர் மறுத்திருந்தார்.