தொழில் நுட்பத்தின் உதவியுடன் ‘தூம்2’ பட பாணியில் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் நூதன முறையில் கொள்ளையடிக்கும் கதையம்சம் கொண்டது ‘தூம்’ திரைப்படம். அத்திரைப்படத்தை முன்மாதிரியாக கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை குஜராத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தின் ஏடிஎம் மையங்களை கூகுள் மேப் மூலம் கண்டறிந்து கொள்ளையடிக்கும் கும்பல், ஏடிஎம்-க்கு பணம் நிரப்ப வரும் வண்டிகளை வழிமறித்தும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி, கையுறை, அதிநவீன தொழில்நுட்பங்கள் என கொள்ளைக் கும்பல் சரியாக திட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளைக்கு பயன்படுத்தும் காரை போலீசார் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையில் ஈடுபட்டதும் காரை பெரிய லாரியில் ஏற்றிக்கொண்டு லாரி மூலம் வேறு இடத்துக்கு சென்று வந்துள்ளனர். இதே போல் கொள்ளைச்சம்பவம் ஹரியானா பகுதியில் நடந்துள்ளதால் கொள்ளைக்கும்பல் ஹரியானாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என போலீசார் திட்டமிட்டனர். அதன்படி தீவிர விசாரணை செய்த போலீசார் கொள்ளைக்கும்பலை கைது செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரி பரிக்ஷிதா, ''கொள்ளை தொடர்பான புகார்கள் வரத்தொடங்கியதும் விசாரணை நடத்த தொடங்கினோம். கொள்ளைக்கும்பல் தொழில் நுட்ப உதவியுடன் திருடியது. கொள்ளைக்கு பயன்படுத்தும் வாகனமானது சிசிடிவி, டோல் பிளாசா என எங்கும் சிக்கவில்லை. இதனால் லாரியில் மறைத்து காரை கொண்டு செல்கிறார்களா என்று சந்தேகம் எழுந்தது. அந்தக் கோணத்தில் விசாரணையை நடத்தி கொள்ளைக்கும்பலை கைது செய்தோம்’’ எனத் தெரிவித்தார்