இந்தியா

லூடோவில் தொடர் தோல்வி ! மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் !

லூடோவில் தொடர் தோல்வி ! மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் !

jagadeesh

ஆன்லைனில் விளையாடப்படும் லூடோவில் மனைவியிடம் தொடர்ந்து தோற்றதால் ஆத்திரமடைந்த கணவன் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 27 ஆயிரம் பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 872 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 133 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் பொது மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் தங்களது பொழுதை திரைப்படம் பார்ப்பது, வீட்டில் வேலைகள் செய்வது, சமைப்பது, ஆன்லைனில் கேம் விளையாடுவது என செலவழிக்கின்றனர். பப்ஜி போன்ற கேம்களை போல இந்த ஊரடங்கில் லூடோ கிங் எனும் ஆன்லைன் விளையாட்டும் பிரபலம் அடைந்துள்ளது. மேலும், ஆண்கள் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறி வரும் நிலையில் குஜராத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊரடங்கு காலத்தில் அடிக்கடி வெளியே சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கணவன் வெளியே செல்வதை தடுப்பதற்காக மனைவி அவரிடம் ஒரு யோசனை சொல்லி இருக்கிறார். அதவாது பொழுதை கழிப்பதற்கு நாம் இருவரும் ஆன்லைனில் லூடோ கிங் விளையாடலாம் என சொல்லி இருக்கிறார். மனைவி டியூஷன் டீச்சராக இருப்பதால் அவருக்கும் பொழுதை கழிப்பதற்கு சிரமமாக இருக்கவே கணவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டுள்ளார்.

இருவரும் லூடோ கிங் விளையாடத் தொடங்கினர். ஆனால் கேமின் மூன்று சுற்றுகளிலும் மனைவியிடம் தோற்ற கணவன் விரக்தியடைந்துள்ளார். விரக்தி  அதிகமான காரணத்தால் மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு முதுகு தண்டில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை தாக்கிய கணவருக்கு இப்போது கோபத்தை கட்டுப்படுத்தும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.