இந்தியா

வெள்ள பாதிப்பு குறித்து பேசிய ஜி.கே.வாசன் - பொது பிரச்னைக்காக தமிழக எம்.பிக்கள் வெளிநடப்பு

வெள்ள பாதிப்பு குறித்து பேசிய ஜி.கே.வாசன் - பொது பிரச்னைக்காக தமிழக எம்.பிக்கள் வெளிநடப்பு

Veeramani

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை என வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது நாடாளுமன்றத்தில் பிற கட்சியினரின் கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக தமிழகம் தொடர்பான விவகாரங்கள் பேசப்படும் சமயங்களில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டுக்கொண்டு பங்கேற்க முனைவார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ்நாடு நலன் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் விதத்தில் செயல்படுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு வெள்ள நிலவரம் குறித்து பேச ஜிகே வாசனை அழைத்தபோதுதமிழ்நாட்டைச் சேர்ந்த பல  உறுப்பினர்கள் பிற விவகாரங்கள் தொடர்பான முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தமிழகம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது என ஜி கே வாசன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் வெளிநடப்பு செய்ய தொடங்கினார்கள். திமுகவை சேர்ந்த வில்சன் மட்டும் தானும் ஜி கே வாசன் எழுப்பிய கோரிக்கையை வலியுறுத்துவதாக பதிவு செய்தார்.

மாநில பிரச்னையையும் மீறி, தேசிய பிரச்னைகளுக்கு தமிழக உறுப்பினர்கள் குரல்கொடுத்து வெளிநடப்பு செய்ததை பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனித்தனர். அவையில் அமைதி நிலவினால்தான் பேச முடியும் என வில்சன் தெரிவித்தபோது, வெங்கையா நாயுடு திமுகவின் மாநிலங்களவை குழு தலைவரான திருச்சி சிவாவை பெயர் சொல்லி அழைத்தார். ஆனாலும் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். திமுக, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழக்கங்களுக்கு இடையே பேசிய ஜி.கே.வாசன், தமிழ்நாடு ஒரு மாதமாக பெய்துவரும் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு மழையால் தமிழ்நாடு தத்தளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். சென்னை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என ஜி.கே.வாசன் பேசினார்.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர் எனவும் ஜிகே.வாசன் குறிப்பிட்டார். காவிரி டெல்டா பகுதி மற்றும் தென்தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன என ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். மாநிலம் முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் பழுதடைந்துள்ளன என ஜி.கே.வாசன் வெள்ள பாதிப்பை பதிவுசெய்தார்.

இத்தகைய சூழலில் வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நிதி உதவி தேவை என வாசன் வலியுறுத்தினார். ஏற்கனவே ஒரு மத்திய குழு  பாதிப்புகளை பார்வையிட்ட நிலையில், அதன்பிறகு மேலும் கனமழை காரணமாக தீவிர வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதை கணக்கிட இன்னொரு மத்திய குழுவை அனுப்ப வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்தார். இத்தகைய பெரிய பாதிப்பை தமிழகம் சந்தித்துள்ள நிலையில் உடனடியாக மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான நிதி உதவி மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- கணபதி சுப்ரமணியம்.