அரசுப் பள்ளி pt web
இந்தியா

NEPக்கு கையெழுத்திட்டால் மட்டுமே நிதி.. கறார் காட்டும் மத்திய அரசு? 15000 ஆசிரியர்களுக்கு ஊதியம்?

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம் 2024 -25 ஆண்டிற்காக SSA எனப்படும் பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 3ஆயிரத்து 586 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 2ஆயிரத்து 152 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்காகவும், ஆயிரத்து 434 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காகவும் உள்ளது. மத்திய அரசு தனது பங்கை நான்கு தவணைகளாக வழங்கவேண்டியுள்ள நிலையில், முதல் தவணையான 573 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டிய முதல் தவணையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கு கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் காலதாமதத்தால் சுமார் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், கல்வித்துறைக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், நிதித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதியை கேட்டு பெறுவதற்கான நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

teacher

மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிதி தர முடியாது என்று கூறவில்லை, புதிய கல்விக் கொள்கையில் கையொப்பம் இட்டால் உடனடியாக நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள் எனக்கூறும் மாநில கல்வித்துறை அதிகாரிகள், மாநிலத்தின் கல்விக் கொள்கையை பின்பற்றி தாங்கள் செயல்படுவதாக கூறியுள்ளனர். மத்திய அரசு காலம் தாழ்த்தினால், நிதித்துறை செயலாளருடன் ஆலோசனை செய்து மாநிலப் பங்கான 40 % ல் இருந்து நிதி எடுத்து பணிகளை தொடர உள்ளதாகவும் பள்ளிகல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.