மக்களவை தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில் கள நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்..
பஞ்சாப் மாநில மக்களவைத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரசும் பஞ்சாப்பில் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் பாரம்பரிய கட்சியான ஷிரோமணி அகாலி தளமும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆம்ஆத்மி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில் அதே வேகத்தை மக்களவைத்தேர்தலிலும் காட்டுகிறது. பஞ்சாப்பில் வலுவான கட்சியாக உருவெடுக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டுள்ள பாஜக இம்முறையும் தனது பலத்தை பரிசோதிக்க உள்ளது.
ஆம்ஆத்மியும் பாஜகவும் தீவிரமாக தேர்தல் களமாடி வரும் நிலையில் காங்கிரசும் ஷிரோமணி அகாலிதளமும் இழந்த ஆதிக்கத்தை மீட்க முனைப்பு காட்டுகின்றன. இவை மட்டுமின்றி ஷிரோமணி அகாலி தளத்தின் சிம்ரன்ஜித் சிங் மான் பிரிவும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஓரளவு வலிமை பெற்று விளங்கும் நிலையில் அவையும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது கடுமையான வாக்குச்சிதறலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம், போதை மருந்து புழக்கம், பிரிவினைவாத பிரச்னை என பல அம்சங்கள் இந்த தேர்தலில் பேசுபொருளாக உள்ளன. கடந்தமக்களவை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களிலும் அகாலிதளம், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் ஆம்ஆத்மி கட்சி ஓரிடத்திலும் வென்றன. 2022இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி 92 இடங்களில் வென்று முதன்முறையாக ஆட்சியமைத்தது.
காங்கிரஸ் 18 இடங்களிலும் அகாலி தளம் 4, பாஜக 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தலைவர்கள் கட்சி மாறியது, கூட்டணிகள் முறிவு என பஞ்சாப்பில் அரசியல் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மாறிவிட்ட நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது கணிக்க இயலாத புதிராக உள்ளது