indhragandhi, op ravindranath pt web
இந்தியா

இந்திராகாந்தி முதல் ஓபிஆர் வரை.. நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முதல் நேற்று ஓ.பி.ரவீந்திரநாத் வரை பல்வேறு மக்கள் பிரதிநிதிகளின் தேர்தல் வெற்றிகள் சுதந்திர இந்தியாவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காண்போம்.

PT WEB

தேர்தலை நடத்துவதும் அதன் முடிவுகளை அறிவிப்பதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வேலை என்றாலும் தேர்தல் சரியாக நடத்தப்பட்டு இருக்கிறதா, முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நியாயமான முறையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு தருணங்களில் தேர்தல் வெற்றி செல்லாது என இந்திய நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன.

கவுன்சிலர் தேர்தல் தொடங்கி குடியரசு தலைவர் தேர்தல் வரை தேர்தல்கள் முறையாக நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த 1975-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்ததை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி முறைகேட்டில் ஈடுபட்டார் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜநாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

indragandhi

குறிப்பாக இந்திரா காந்தியின் தேர்தல் முகவராக செயலாற்றிய யாஷ்வால் கபூர் மத்திய அரசு ஊழியராக இருந்தவர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அரசு ஊழியர்கள் தேர்தல் முகவராக ஈடுபடக் கூடாது. அதை சுட்டிக்காட்டி 1975-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ஆவது பிரிவு, 7-ஆவது விதியின் அடிப்படையில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சமீபத்திய உதாரணங்கள் என்று பார்த்தால் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கிறிஸ்தவரான அவர் தனி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அதற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவித்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாங் கைஹேய் ஊக்ரம் ஹென்றே தேர்தல் ஆவணங்களில் தவறான தகவல்களை தெரிவித்தார் என கூறி அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் தொடர்ந்த மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் வைகுந்தபுர் என்ற பகுதியில் மநேன்ந்திரா கார்க் முனிசிபாலிட்டி தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்ற தீபக் குமாரி திவாரி என்ற வேட்பாளர் தேர்தல் ஆவணங்களில் தனது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை தெரிவிக்காததால் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அவரது தேர்தலை செல்லாது என அறிவித்தது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

ஓ பி ரவீந்திரநாத்

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் நீதிபதி வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்களை ரவீந்திரநாத் தெரிவிக்கவில்லை எனவும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது எனவும் கூறி, அதனால் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.