இந்தியா

க்ரைம் ஷோ பாணி.. புது ஃபிரிட்ஜ், ஊதுவத்தி... டெல்லி காதலி கொலை வழக்கின் ஷாக் ரிப்போர்ட்!

க்ரைம் ஷோ பாணி.. புது ஃபிரிட்ஜ், ஊதுவத்தி... டெல்லி காதலி கொலை வழக்கின் ஷாக் ரிப்போர்ட்!

JananiGovindhan

(குறிப்பு: மிகவும் கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தகவல்கள் என்பதால், இளகிய மனமுடையவர்கள், இதை கவனமாக படியுங்கள்) 

லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலியை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் வெவ்வேறு இடங்களில் வீசிய கொடூரம் குறித்த செய்தி நாட்டையே அதிர வைத்திருக்கிறது. காதலியை கொன்ற காதலனை டெல்லி போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷ்ரத்தா (27) மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்திருக்கிறார். அங்குதான் அஃப்தப் அமீன் பூனாவாலாவை சந்தித்திருக்கிறார். இருவரும் நட்பாக பழகியதை அடுத்து மூன்று ஆண்டுகளாக காதலித்தும் வந்திருக்கிறார்கள். இவர்களது காதலுக்கு ஷரத்தாவின் பெற்றொர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி அஃப்தப் அமீனுடன் டெல்லியின் மெஹ்ரவ்லியில் உள்ள சத்தர்பூர் பஹாடி பகுதியில் குடியேற்றி லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அஃப்தப் தற்போது ஃபுட் blogger ஆக இருந்து வருகிறார்.

டெல்லிக்கு குடியேறிய பிறகு அஃப்தப்பிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி ஷரத்தா தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால் இது தொடர்பான பேச்சை எடுக்கும்போதெல்லாம் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்படுவதே வாடிக்கையாகி இருக்கிறது. இப்படியேதான் சம்பவம் நடந்த மே 18ம் தேதி ஷரத்தா திருமணத்தை பற்றி பேச்சை எழுப்பிய போது, ஆத்திரமடைந்த அஃப்தப் ஷரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.

அதுபோக, கொலையில் இருந்து தப்பிப்பதற்காக அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியதோடு, அதனை மறைத்து வைக்க புதிதாக ஃப்ரிட்ஜை வாங்கி இருக்கிறார். இதனையடுத்து ஒவ்வொருநாளும் நாள்ளிரவு 1 அல்லது 2 மணியளவில் மெஹ்ரவ்லி அருகே உள்ள காட்டுப்பகுதி மற்றும் இடுகாடுகளில் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட ஷரத்தாவின் உடலை சந்தேகம் வராதபடி 18 நாட்களாக சென்று வீசியிருக்கிறார்.
ஷ்ரத்தாவின் உடலை வைத்திருந்த அறையிலேயே தங்கியிருந்து இத்தனை வேலைகளையும் அஃப்தப் பார்த்திருக்கிறார்.

இதுபோக, உடல் துண்டுகளை வீசி எறிந்ததும் வீட்டில் ரத்த கறை அல்லது எந்த துர்நாற்றமும் வீசக் கூடாது என்பதற்காக அகர்பத்தி, தூபம் போன்றவற்றை தொடர்ந்து ஏற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஷ்ரத்தாவின் நண்பர்கள், ஷ்ரத்தாவுடன் இரண்டரை மாதங்களாக தங்களுடன் எந்த தொலைதொடர்பும் இல்லாதது குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களும், ஷ்ரத்தாவின் சமூக ஊடக கணக்குகளை ஆராய்ந்ததில் இடைப்பட்ட காலத்தில் எந்த பதிவும் இல்லாததால் சந்தேகமடைந்து மும்பையின் பால்கர் காவல் நிலையத்தில் ஷரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் புகாரளிக்கவே, பெண்ணின் செல்ஃபோன் எண்ணை வைத்து டெல்லியில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து டெல்லிக்கு விரைந்த விகாஸ், மெஹ்ரவ்லி போலீசாரை அணுகியதும் விசாரணை தொடங்கியிருக்கிறது.

அதன் பிறகே விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் கொலை நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த நவம்பர் 12ம் அஃப்தப் அமீனை கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் நண்பர் லக்ஷ்மன் டைம்ஸ் நவ் செய்தி தளத்திடம் பேசியிருக்கிறார். அதில், “ஷ்ரத்தா என்னிடம் அவர் கொல்லப்படுவார் என கூறியிருந்தார். மே மாதம் சமயத்தில் ஷ்ரத்தா பேசியிருந்தார். என்னிடம் இருந்து எந்த மெசேஜ், ஃபோன் கால் வரவில்லை என்றால் என் குடும்பத்திடம் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்தே ஷ்ரத்தாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் கவலையுற்றேன். மியூட்சுவல் நண்பர்கள் மூலம் அவருடைய சகோதரரை அணுகி போலீசிடம் செல்ல வேண்டும் என கூறினேன். ஷ்ரத்தாவுக்கும் அஃப்தப்பிற்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அப்போது இந்த வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுவிடும்படி ஷ்ரத்தா கேட்டதையடுத்து, அவரை நாங்களே மீட்டோம். அப்போது அவரே போலீசிடம் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்” என லஷ்மன் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி போலீசின் கூற்றுப்படி, dexter உள்ளிட்ட பல க்ரைம் த்ரில்லர் படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதில் அஃப்தப்பிற்கு ஆர்வம் இருந்ததால் ஷ்ரத்தாவை கொல்வதற்கு முன்பு படங்களில் வருவதை போல காரியத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்கள். இதனிடையே, ஷ்ரத்தா - அஃப்தப் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே இருப்பவர்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளம் அணுகிய போது, “அவர்கள் முறையாக அடையாள அட்டைகளை காண்பித்தே இங்கு குடியேறினார்கள்.

அவர்களிடத்தில் இதுகாறும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அந்த பெண்ணை ஒன்றோ அல்லது இருமுறைதான் பார்த்திருப்போம். அதிகமாக சவுண்ட் வைத்து பாட்டு கேட்பதும், அவ்வப்போது சண்டையில் வாக்குவாதம் செய்வதும் கேட்பதுண்டு. அஃப்தப் கைது செய்யப்பட்ட பிறகுதான் என்ன விவகாரம் என்றே தெரிய வந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு நாள் முழுக்க ஷரத்தாவின் உடலை துண்டுத் துண்டாக வெட்ட அஃப்தப்பிற்கு நேரம் எடுத்ததாகவும், மற்ற பாகங்களை வீசி எறிந்ததும் இறுதியாக இரண்டு மாதங்கள் கழித்தே ஷரத்தாவின் தலையை அஃப்தப் அப்புறப்படுத்தியிருக்கிறார் எனக் கூறியுள்ள டெல்லி போலீசார், இதுவரையில் 13 எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.