ஏர் இந்தியா எக்ஸ் தளம்
இந்தியா

இன்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மொத்தமாக 4 நிறுவனங்கள் பாதிப்பு!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவரும் நிலையில், இன்று (அக்.24) ஒரேநாளில் 85 விமானங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த அக்டோபர் 14-22 வரை சுமார் 120-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதிகூட இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் 30 விமானங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த ஒருவாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ.500 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (அக்.24) ஒரேநாளில் 85 விமானங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 20 விமானங்கள், ஆகாசா நிறுவனத்திற்கு சொந்தமான 25 விமானங்கள், விஸ்தாரா நிறுவனத்திற்குச் சொந்தமான 20 விமானங்கள், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 20 விமானங்கள் என மொத்தம் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா

விமானங்களுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதுதொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: பிரிஜ் பூஜன் சிங்கிற்கு எதிரான போராட்டம்|வெளியான அதிர்ச்சி தகவல்.. உண்மையை உடைத்த சாக்‌ஷி மாலிக்!

இந்த ஆலோசனையின்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஐந்தாண்டுகளுக்கு புரளி அழைப்பாளர்களை நோ-ஃப்ளை பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அதுபோல், மேலும் வெடிகுண்டு மிரட்டல்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன. இதனிடையே இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 8 வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.

இண்டிகோ விமானம்

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல்களுக்கு துணைபோவதாக பிரபல சமூக வலைதளமான எக்ஸ் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் தளத்தின்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது. ஆனால் தளத்தின் தனிநபர் உரிமைகள் காரணமாக எக்ஸ் தளம் அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது.

இந்த தளத்தின் வாயிலாகவே பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக @adamlanza111, @psychotichuman and @schizobomer777 ஆகிய மூன்று ஐடிகள் இதில் தொடர்பு கொண்டுள்ளதை போலீஸ் கண்டறிந்துள்ளது. ஆனால் அந்த ஐடிகள் குறித்து மேலதிக தகவல்களை எக்ஸ் தளம் தர மறுக்கும் சூழலில்தான் மத்திய அரசு இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மேலும், சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது என்றும் அது விமர்சித்துள்ளது.

இதையும் படிக்க: மான் வேட்டை வழக்கு|”சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும்” - எச்சரிக்கை விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் உறவினர்