இந்தியா

இந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்

webteam

இந்திய ராணுவத்திற்கென ரஃபேல் போர் விமானங்களை வாங்கும்போது அதன் இந்தியக் கூட்டாளி நிறுவனமாக அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டதில் ஊழல் இருக்கிறது என காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டிவந்த நிலையில், ஃபிரான்சின் முன்னாள் அதிபர் ஃப்ரான்ஸுவா ஒல்லாந்தே அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். 

இந்திய ராணுவத்திற்கென ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், 2015 ஏப்ரலில் அப்போதைய பிரெஞ்சுப் பிரதமர் ஒல்லாந்தேவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையில் கையெழுத்தானது. 

இந்த ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கும். விமானத்தைத் தயாரிக்கும் தஸால் நிறுவனம், அதன் இந்தியக் கூட்டாளியாக ஒரு நிறுவனத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த நிறுவனத்திற்கு 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை தஸால் அளிக்க வேண்டும் என்பது விதி. 

அந்த இந்தியக் கூட்டாளி நிறுவனமாக, அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபென்ஸ் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றிப் பலரும் கேள்வியெழுப்பியபோது தஸால் நிறுவனம்தான் ரிலையன்ஸை தேர்வுசெய்தது, இந்திய அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என பா.ஜ.க. மறுத்துவந்தது. 

ஆனால், மீடியா பார்ட் என்ற பாரீஸிலிருந்து செயல்படும் செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ரிலையன்ஸ் என்பது இந்திய அரசின் தேர்வு; அதில் தாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஃப்ரான்சுவா ஒல்லாந்து சொல்லியிருக்கிறார். 

முந்தைய பேச்சு வார்த்தைகளின்படி, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம்தான் தஸாலின் துணை நிறுவனம் என்று இருந்தது. அதைக் கழற்றிவிட்டுவிட்டு, ரிலையன்ஸ் சேர்க்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.