இந்தியா

ரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்

webteam

ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைத்தது இந்திய அரசுதான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலந்த் கூறியதாக 'மீடியாபார்ட்' பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியீடு. 

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுந்ததில் பிரான்ஸ் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான் எனவும் பிரான்ஸ் அரசுக்கு இதில் வேறு வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை என்றும் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலந்த் கூறியதாக பிரான்ஸில் வெளியாகும் மீடியாபார்ட் என்ற வெளியீட்டை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த செய்தி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் அரசு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பிரான்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய இந்திய கூட்டு நிறுவனங்களை தேர்வு செய்வதில் அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப தாங்கள் கூட்டு வைத்துக்கொள்ளவிரும்பும் இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து இந்திய அரசின் ஒப்புதலுக்கு அளிக்க முழு சுதந்திரம் இருப்பதாக அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

மேலும் 36 ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது தொடர்பாக இரண்டு அரசுகளுக்கிடையில் கையெழுத்தான ஒப்பந்தம் என்பது, விமானங்கள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்வதும், அவற்றின் தரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமே தொடர்புடையது என கூறியுள்ளது. ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் 2017ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டதாக விளக்கமளித்துள்ளது. இதன் அடிப்படையில் ஃபால்கன் மற்றும் ரஃபேல் போர் விமானங்களுக்கு உதிரிபாகங்களை தயாரிக்க நாக்பூரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்திருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.