இந்தியா

கருத்து சுதந்திரம் என்பது புனிதமானது: கெஜ்ரிவால் ஆவணப்பட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

webteam

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரம் என்பது புனிதமானது என கருத்து தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நச்சிகேட்டா வால்ஹேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திரைப்படம், நாடகம், நாவல் போன்றவை கலைப் படைப்புகள் என்றும் நீதிமன்றங்கள் கலைச் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது எனவும் தெரிவித்தது. ஒரு திரைப்படம் முழுவதும் உண்மையின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை எனவும் பார்ப்பவரின் உள் மன எண்ணத்தை தூண்டுவதாக இருக்கலாம் என நீதிபதிகள் கூறினார். ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்றால் அது சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்காகத்தான் இருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. திரைப்படங்களுக்கு தடைவிதிப்பது குறித்து நீதிமன்றங்கள் அவசரம் காட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அர்விந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள An insignificant man என்ற ஆவணப்படத்தில், அர்விந்த் கெஜ்ரிவால் மீது நச்சிகேட்டா வால்ஹேகர் என்பவர் பேனா மையை வீசிய சம்பவம் காட்சியாக இடம்பெற்றுள்ளது. இது தமக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக நச்சிகேட்டா வால்ஹேகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

ராஜபுத்திர இனத்தை சேர்ந்த பத்மாவதி என்ற ராணி கதாப்பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பத்மாவதி திரைப்படத்தை வெளியிடக் கூடாது என எதிர்ப்புக் குரல்கள் எழும்பி வரும் சூழலில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.