இந்தியா

மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் பதுங்கினால் சொத்துகள் பறிமுதல் - அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் பதுங்கினால் சொத்துகள் பறிமுதல் - அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

webteam

நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அத்தகையோரின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மசோதா மக்களவையில் கடந்த 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், தொடர் அமளி காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அவசரச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இதன்படி, நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் நபர்களின் சொத்துக்களை நீதிமன்ற அனுமதியுடன் பறிமுதல் செய்ய முடியும். குற்றம் நடந்திருப்பதாக நம்பப்படும் நிலையிலேயே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சட்டம் வழிவகுக்கிறது. லலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி போன்றோர் இந்தியாவில் பொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இது போன்றவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அதில் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.