இணையதளம் மூலம் மோசடி கோப்புப்படம்
இந்தியா

ஹைதராபாத் | மோசடிக்கு உதவும் செயலியாக மாறிய மேட்ரிமோனி செயலி? ரூ 22 லட்சத்தை இழந்த இளைஞர்!

சண்முகப் பிரியா . செ

ஹைதராபாத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணின் கணக்கில் இருந்து ரெக்வஸ்ட் வந்துள்ளது. அவரும் அதை ஏற்றிருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வரவே, இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கியுள்ளனர்.

சைபர் மோசடி

அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கவே இருவரும் அலைபேசி எண்களைப் பரிமாரிக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்ததால், அந்த பெண் தனிப்பட்ட காரணங்களை கூறி, அவரிடம் பணம் கேட்டுள்ளார். இவரும் அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அடிக்கடி அவரிடம் பணம் கேட்கத் தொடங்கியுள்ளார்.

இந்த இளைஞரும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். இப்படி சுமார் 22 லட்சம் கடன் கொடுத்த பிறகு, அந்த பெண் இவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்படுவதை (!) உணர்ந்த அந்த இளைஞர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் 32 வயதானவர் என்பதும் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது அவர் தனக்கு அறிமுகமில்லா வேறொரு இளம் பெண்ணின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்து போலியாக தன் அடையாளத்தை உருவாக்கி இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடி

இதுகுறித்து அப்பகுதி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கே.பவானி பிரசாத் ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இணைய மோசடி செய்பவர்கள் தங்கள் டார்கெட்டுகளை அடையாளம் காண மேட்ரிமோனியல் தளங்கள் மற்றும் டேட்டிங் ஆப்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

அதில் இவர்களின் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பலருடன் நட்பு கொள்ளத் தொடங்குகின்றனர். இதே போல சமூக ஊடக தளங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் பலர் நட்பின் பெயரிலும் இன்னும் சிலர் திருமணத்தின் பெயரிலும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்ல... சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மார்பிங் படங்களை இணையத்தில் பரப்புவதாகவும் அச்சுறுத்துகிறார்கள். இவர்களிடம் ஏமாறாதீர்கள்” என்கிறார்.

அதுமட்டுமல்லாது சைபர் கிரைம் காவல்துறையின் கூற்றுப்படி, ஒவ்வொரு மாதமும் ஹைதராபாத்தில் மட்டும் இதுபோல குறைந்தது ஐந்து வழக்குகள் பதிவாகின்றனவாம். இப்படி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் சமூக வலைதளங்களை கனவனமாகப் பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.