இந்தியா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - முகக் கவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய டெல்லி

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - முகக் கவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய டெல்லி

சங்கீதா

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் முகக்கவசம் என்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக 500-க்கு மேல் பதிவாகி வருகிறது. இதனை அடுத்து டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தலைநகர் டெல்லியில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் பொதுஇடங்களில் முக கவசம் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அடிப்படையான விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரவும், மருத்துவமனைகளில் உயர்மட்ட கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, டெல்லியிலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஜுன் மாதம் மத்தியில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.