குன்றத்தூர் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை. வாடகைக்கு விட வைத்திருந்த காலி வீட்டையும் உடைத்த கொள்ளையனால் அதிர்ச்சி.
சென்னை குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், கோல்டன் பேரடைஸ், கிருஷ்ணா கார்டன் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணமும் அதே பகுதியில் வசித்து வந்த உபேந்திரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததும் மேலும் இரண்டு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு வீடு வாடகைக்கு விடுவதற்காக காலியாக இருந்ததும் மற்றொரு வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கையில் இரும்பு ராடுடன் வரும் மர்ம நபர் முகத்தில் டவலை கட்டிக்கொண்டு பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கிடவும் தொடர் ரோந்து பணி மேற்கொள்ளவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இதற்கிடையே மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் தெருத்தெருவாக சுற்றி மதில் சுவர் ஏறி குதித்து வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது..