இந்தியா

மம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்

மம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்

webteam

மேற்கு வங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் மருத்துவர்கள் போராட்டம் 4 மணி நேரத்தில் கைவிடப்படவேண்டும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் அடிப்படு மருத்துவர் உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்று கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். 

இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கண்டனத்தை தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மருத்துவர்கள் அல்ல எனவும் வெளியிலிருந்து சிலர் மாநிலத்தில் சிக்கலை ஏற்படுத்த முற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தை அரசு ஒருபோதும் எந்த வகையிலும் அனுமதிக்காது எனவும் இது சிபிஎம் மற்றும் பாஜகவினரின் சதி எனவும் குற்றம்சாட்டினார். 

நீங்கள் மக்களுக்கு சேவையை செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கு சேவை செய்யாமல் ஒருவர் மருத்துவராக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தினார். மேலும், அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில்,  4 மணி நேரத்தில் கைவிடப்படவேண்டும் என முதலமைச்சர் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.