ஹரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அம்மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இதற்கு முன்பாகவே மல்யுத்த போட்டியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் இன்று, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். முன்னதாக, அவர்கள் காங்கிரஸின் மூத்த தலைவர்களைச் சந்தித்திருந்தனர். அவர்கள் இருவரும் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் எனவும், அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர்கள் காங்கிரஸில் இணைந்தது குறித்து ஓய்வு பெற்ற சாக்ஷி மாலிக், “பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன்.
விளையாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், மல்யுத்தத்தில் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளேன். எங்களின் கிளர்ச்சி, பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது. எங்கள் போராட்டம் தொடரும் என்பதே என் கருத்து.
இந்திய மல்யுத்த சம்மேளனம் சுத்தப்படுத்தப்பட்டால்தான் வீராங்கனைகள் மீதான சுரண்டலுக்கு முடிவு கிடைக்கும். எங்கள் போராட்டம் நேர்மையானது. அது தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சாக்ஷி மாலிக், வினேத் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இதுதொடர்பாக முறையாக விசாரணை நடைபெறவில்லை என கடந்த ஆண்டு ஜனவரி முதல் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்காக நடைபெற்ற தேர்தலில், கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
இவருடைய தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல்முறையாக பதக்கம் வென்ற வீராங்கனை எனப் பெருமையை பெற்ற சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது பேசுபொருளானது.