இந்தியா

பேச்சில் வல்லவர்; வாஜ்பாயின் விசுவாசி; ஜஸ்வந்த் சிங்கின் வாழ்க்கை பயணம்..!

பேச்சில் வல்லவர்; வாஜ்பாயின் விசுவாசி; ஜஸ்வந்த் சிங்கின் வாழ்க்கை பயணம்..!

EllusamyKarthik

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82. நாட்பட்ட நோயினால் அவதிப்பட்டு வந்தார் அவர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார் ஜஸ்வந்த் சிங். அவர் வாஜ்பாயின் நம்பிக்கையை வென்ற விசுவாசியும் கூட. 

அதன் காரணமாக பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் நிதித் துறை அமைச்சராக 1998 - 2004 வரையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பணியாற்றியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

1957 முதல் 1966 வரை இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஜஸ்வந்த் சிங் ‘மேஜர்’ ரேங்கில் இருந்த போது விருப்ப ஒய்வு பெற்றவர். ‘முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் ராணுவ பணியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என ஓய்வுக்கான விளக்கத்தை கொடுத்திருந்தார் அவர். 

பா.ஜ.கவை நிறுவிய தலைவர்களில் ஜஸ்வந்த் சிங்கும் ஒருவர். 

1999-இல் பயங்கரவாதிகள் இந்தியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தை 150 பயணிகளோடு கடத்தியிருந்தனர். அவர்களை பத்திரமாக திரும்ப ஒப்படைக்க மவுலானா மசூத் அசார் உட்பட மூன்று பயங்கரவாதிகளை ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் டிமெண்ட் வைத்திருந்தனர் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள். 

அதன்படி மூன்று பயங்கரவாதிகளையும் இந்திய விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்ற அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் கடத்தப்பட்ட பயணிகளை மீட்டு வந்தார். அதனால் அப்போதைய பா.ஜ.க அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

பொக்ரான் II, கார்கில் போர் மற்றும் அமெரிக்காவுடனான சுமூக பேச்சுவார்த்தை என அப்போதைய பா.ஜ .க அரசு எடுத்த முக்கிய முடிவுகளுக்கு காரணமாக இருந்தவர். 

பேச்சாற்றலில் வல்லவர். எதிரியையும் நகைப்போடு விமர்சிப்பவர். அவர் மீது சமயங்களில் விமர்சனங்களும் எழுவது உண்டு.