தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் என்.சிவபிரசாத். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இவரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் சந்தித்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் உயிரிழந்தார்.
முன்னதாக இவர் மக்களவை எம்பியாக இருந்தப் போது ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிராக பல வேடங்கள் இட்டு போராட்டம் நடத்தினார். அதேபோல ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் இவர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.