சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஐசியூவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அதில், சசிகலாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பை குறைக்க இன்சூலின், ஸ்டிராய்ட்ஸ் போன்ற ஊசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டும் மருந்துகளும் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நுரையீரலில் தொற்று அதிகமாக இருப்பதால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்தது. இதுகுறித்து, நுரையீரல் சிறப்பு நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “சி.டி.ஸ்கேனில் பார்வையளவில் தெரியக் கூடிய குறியீடு அடிப்படையில் தொற்று கூறப்பட்டுள்ளது. குறியீடு 10க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்த நிலையில், இன்று எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதால் சசிகலா திட்டமிட்டபடி 27 ஆம் தேதி விடுதலையாவது தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.