இந்தியா

“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..!

“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..!

webteam

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகிய மூன்று பேருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உலக வறுமையை போக்குவது தொடர்பான ஆய்வை நடத்தியதற்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அபிஜித் பானர்ஜிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,“பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் நீங்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் உங்களது மனைவி எஸ்தர் டஃப்லோவும் நோபல் பரிசு பெற்றது மேலும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. 

வறுமை ஒழிப்பிற்காக நீங்கள் நடத்திய ஆய்வுப் பணிகள் மிகவும் சிறப்பானது. இதில் உள்ள சில புதிய முறைகள் வறுமை ஒழிப்பிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி சார்ந்த பொருளாதார ஆய்வுகளை அங்கீகரித்து நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒரு பொருளாதார மாணவராக எனக்கு பெரும் இன்பத்தை தந்துள்ளது.  உங்களுடைய எதிர்கால ஆய்வுப் பணிகளும் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.